டெல்லி செங்கோட்டைக்கு அருகில் சிற்றூந்து ஒன்று, கடந்த 10 ஆம் திகதி வெடித்து சிதறியது.
இந்த சம்பவத்தில் சிற்றூந்தை இயக்கிய வைத்தியர் உமர் நபி உட்பட, 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவமானது, பயங்கரவாத தாக்குதல் என அறிவிக்கப்பட்டு, மத்திய தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.
தாக்குதலைத் தொடர்ந்து, புல்வாமாவின் கோய்ல் கிராமத்தில் உள்ள உமரின் வீட்டில் பாதுகாப்பு படையினர், கடந்த சில நாட்களாக சோதனை நடத்தியதில், பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதுடன், வெடிபொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அதற்கமைய, ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பல பயங்கரவாத அமைப்புகளுடன் உமர், தொடர்பில் இருந்தமையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வைத்தியர் உமரின் வீடு பாதுகாப்பான முறையில் வெடி வைத்துத் தகர்க்கப்பட்டதுடன், கட்டட இடிபாடுகளில் தடயவியல் துறையினர் ஆய்வு செய்துள்ளனர்.
இதன்போது, வெடிபொருட்களை சோதிப்பதற்கு உமர், வீட்டில் ஆய்வகம் வைத்திருந்தமையும், டெல்லியில் குண்டுவெடிப்பு நடத்த சோதித்து பார்த்துள்ளமையும் தெரியவந்துள்ளது.
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளிகள் மூவரில் வைத்தியர் உமர் வெடிகுண்டு தயாரிப்பதில் நிபுணராக இருந்துள்ளமையால், தனது வீட்டில் ஒரு ஆய்வகத்தை அமைத்துள்ளமையும் தெரியவந்துள்ளது.