திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படங்களை வணிக நோக்கத்திற்காக பயன்படுத்துவதற்கு, சமூக வலைத்தளங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
யூடியூப் சேனல்கள், சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் மற்றும் பல சமூக வலைத்தளங்களை எதிர்த்து இளையராஜா தொடர்ந்த வழக்கில், இன்று நீதிமன்றம் இந்த உத்தரவை வெளியிட்டது.
தனது மனுவில்,
தனது புகைப்படம்,
பெயர்,
‘இசைஞானி’ என்ற பட்டப்பெயர்,
அல்லது குரல்
எதையும் அனுமதி இன்றி வணிக ரீதியாக பயன்படுத்தக்கூடாது என்று இளையராஜா கேட்டுக்கொண்டார். மேலும், சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே பதிவிட்டுள்ள புகைப்படங்களையும் நீக்க வேண்டும் எனவும் கோரினார்.
அனுமதியின்றி தனது புகைப்படத்தைப் பயன்படுத்தி வந்த வருமான விவரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு உத்தரவிடவும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கின் போது, இளையராஜா தரப்பு மூத்த சட்டத்தரணிகள், அவரது புகைப்படங்கள் மார்ஃபிங், ஏஐ திருத்தம் உள்ளிட்ட முறைகளில் மாற்றப்பட்டு, ரீல்ஸ், மீம்ஸ், விளம்பரங்கள் வழியாக வருவாய் ஈட்டப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலாக நீதிபதி, “புகைப்படம் அல்லது பெயரைப் பயன்படுத்துவதால் இளையராஜாவுக்கு என்ன பாதிப்பு?” என்று கேட்டார். அதற்கு பதிலளித்த இளையராஜா தரப்பு, இந்த செயல்கள் அவரது தனிப்பட்ட உரிமை மற்றும் கெளரவத்தைப் பாதிப்பதாக வாதித்தது.
வாதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, நீதிபதி இளையராஜாவின் புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தற்காலிகத் தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், யூடியூப் சேனல்கள் மற்றும் பிற நிறுவனங்களிடம் மனுவுக்குப் பதில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.