இலங்கைக்கு சுற்றுலா வந்த குவைட் நாட்டு ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி ஒருவரின் 13 இலட்சம் ரூபா பெறுமதியான பணம் மற்றும் உடமைகள் அடங்கிய பையைத் திருடிய வாடகை கார் சாரதியை, சம்பவம் நடந்து 12 நாட்களுக்குப் பிறகு கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேகநபரிடமிருந்து திருடப்பட்ட 2,000 அமெரிக்க டொலர்கள், 112 குவைட் டினார்கள், வங்கி அட்டைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நடந்தது என்ன? கடந்த மாதம் 26ஆம் திகதி இலங்கைக்கு வந்த குறித்த அதிகாரி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டையிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சொகுசு வாடகை கார் ஒன்றில் வந்துள்ளார். ஹோட்டலுக்குச் சென்ற சில நிமிடங்களில், தனது சிறிய பை காரிலேயே தவறிவிட்டதை உணர்ந்த அவர், இது குறித்து பொலிஸில் புகார் அளித்தார்.
முதலில் ஹோட்டலின் CCTV காட்சிகளைப் பரிசோதித்த போது, அவர் ஒரு பையுடன் மாத்திரமே ஹோட்டலுக்குள் நுழையும் காட்சி பதிவாகியிருந்தது. இது குறித்து சாரதியிடம் கேட்டபோது, தான் அத்தகைய பையைப் பார்க்கவில்லை என மறுத்துள்ளார்.
எனினும், பொலிஸார் கட்டுநாயக்க விமான நிலையத்தின் CCTV காட்சிகளை ஆராய்ந்தபோது, குறித்த அதிகாரி இரண்டு பைகளுடன் காரில் ஏறுவது தெளிவாகத் தெரிந்தது. இதன் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் சாரதி கைது செய்யப்பட்டார்.
ஒப்புதல் வாக்குமூலம்: பொலிஸாரின் தீவிர விசாரணையில், பையைத் தான் வைத்திருப்பதாக சாரதி ஒப்புக்கொண்டார். பையிலிருந்த 500 டொலர்களை நீர்கொழும்பிலுள்ள பணப் பரிமாற்று நிலையமொன்றில் மாற்றி 155,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி, திவுலபிட்டிய பகுதியில் உள்ள அவரது வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பை மற்றும் ஏனைய உடமைகளை பொலிஸார் மீட்டனர்.

இலங்கை சினிமா