இலங்கைக்கு தென்கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இன்று (09) அதிகாலை 4.00 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து 200 கி.மீ தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இது மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று மாலை பொத்துவில் மற்றும் திருகோணமலைக்கு இடைப்பட்ட பகுதி ஊடாக இலங்கையின் கரையை கடக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் மாத்தளை, திருகோணமலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ இற்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.
கண்டி, நுவரெலியா மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 50-75 மி.மீ வரையான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மத்திய, ஊவா, கிழக்கு மாகாணங்களிலும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலும் மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 70 கி.மீ வரை அதிகரிக்கலாம்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இலங்கை சினிமா