இலங்கையின் கணினி எழுத்தறிவு விகிதமானது 2025ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் 38.4 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாட்டின் தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் கல்வி மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பிராந்திய ரீதியிலான வளர்ச்சி:

கணினி எழுத்தறிவில் நகர்ப்புறங்களே முன்னிலையில் உள்ளன. இதன்படி, நகர்ப்புறங்களில் 52.1 சதவீதமும், கிராமப்புறங்களில் 36.6 சதவீதமும் கணினி எழுத்தறிவு பதிவாகியுள்ளது. எனினும், பெருந்தோட்டப் பகுதிகளில் இது 18.6 சதவீதமாகக் குறைவாகவே காணப்படுகிறது.

பாலின மற்றும் வயது ரீதியிலான ஒப்பீடு:

பாலின ரீதியாகப் பார்க்கும்போது, ஆண்களிடையே கணினி எழுத்தறிவு 39.9 சதவீதமாகவும், பெண்களிடையே 37.1 சதவீதமாகவும் காணப்படுகிறது. குறிப்பாக, 15 முதல் 19 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்களிடையே இந்த விகிதம் 75.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நாட்டின் எதிர்கால சந்ததியினர் தொழில்நுட்பத்தில் கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது.

மொழித் தேர்ச்சியின் தாக்கம்:

ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களிடையே கணினிப் பயன்பாட்டுத் திறன் மிக அதிகமாகக் காணப்படுவதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இலங்கையில் 5 முதல் 69 வயதுக்கு இடைப்பட்ட பெரும்பாலானோர், பிறரின் உதவியின்றித் தாமாகவே கணினியைப் பயன்படுத்தும் ஆற்றலைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை சினிமா