ஜப்பானிய விமானச் சேவை நிறுவனமான ANA (All Nippon Airways) குழுமம், AirJapan விமானச் சேவையின் அனைத்து விமானச் செயற்பாடுகளையும் 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நிறுத்த தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசியா பிராந்தியத்தில் குறைந்த செலவில் விமானப் பயணங்களை வழங்கும் நோக்கில் குறித்த விமானச் சேவை இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

எனினும் AirJapan விமான சேவையின் இறுதி விமானப் பயணம் 2026ஆம் ஆண்டு மார்ச் 29 ஆம் திகதி நள்ளிரவு 12.55 உடன் நிறைவடையும் என அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ANA குழுமம் கடந்த 30 ஆம் திகதி வெளியிட்ட அறிவிப்பில், தமது குழுமத்தின் வர்த்தக நாம உத்தியோகபூர்வ வியூகத்தை மறுசீரமைக்க (restructure) முயற்சிப்பதன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

இதன்படி, ANA குழுமத்தின் கீழ் ANA (All Nippon Airways), Peach மற்றும் AirJapan ஆகிய 3 வர்த்தக நாமங்கள் தற்போது இயங்கி வருகின்றன.

இந்த மறுசீரமைப்பின் மூலம், ANA குழுமத்தின் விமானச் சேவை செயற்பாடுகள், 2 வர்த்தக நாமங்களின் கீழ் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.