பரந்தன் – முல்லைத்தீவு, A35 வீதி முரசுமோட்டை பகுதியில் டிப்பர் மற்றும் உழவு இயந்திரம் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.

நேற்று இரவு பரந்தன் பகுதியிலிருந்து முரசுமோட்டை நோக்கி, சீமெந்து கற்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரமும், எதிர்த்திசையில் வந்த டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றது.

உழவு இயந்திரத்துடன் மோதிய டிப்பர், வீதியில் குறுக்காகத் தடம் புரண்டதில் டிப்பரின் சாரதி சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரிய வருகின்றது.

மேலும், உழவு இயந்திரத்தில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் பயணித்திருந்த நிலையில், மூவரும் காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.