சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை எந்தவொரு இறுதி தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு கட்டண உயர்வுக்கு விதிக்கப்பட்ட வரம்பு 15% ஆக இருந்தாலும், அது திருத்தத்திற்கான அதிகபட்ச வரம்பு மட்டுமேயாகும் அன்றி, தீர்மானிக்கப்பட்ட மதிப்பு அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு 3 வருடங்களுக்கும் ஒருமுறை கட்டணத் திருத்தம் இடம்பெறுவதால் இந்தக் கட்டணத் திருத்தம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஆணையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

இறுதியாகக் கட்டணத் திருத்தம் 2022 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது.

இதன்படி, 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீத கட்டணத் திருத்தம் பொதுவாக மேற்கொள்ளப்பட வேண்டியிருந்தாலும், இந்த ஆண்டுக்கான கட்டணத் திருத்தம் தொடர்பில் இதுவரை இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.