இவற்றை தடுக்க, ‘மெட்டா’ நிறுவனம் தங்களின், ‘வட்சப், பேஸ்புக்’ தளங்களில், புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பகுதிநேர வேலை, சலுகை விலையில் பொருட்கள், முதலீட்டு வாய்ப்புகள், ‘டிஜிட்டல்’ கைது என, பல வழிகளில் பொதுமக்களை மோசடி செய்து பணம் பறிக்கும் செயல்கள் நடந்து வருகின்றன.
இந்த மோசடிகள் பெரும்பாலும், ‘வட்சப், பேஸ்புக்’ தளங்கள் மூலம் நடைபெறுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த செயலிகளில் புதிய மோசடி தடுப்புக்கான பாதுகாப்பு அம்சங்களையும் விழிப்புணர்வு முயற்சிகளையும் அதன் தாய் நிறுவனமான, ‘மெட்டா’ அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன்படி, ‘பேஸ்புக் மெசெஞ்சரில்’ செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மோசடியை கண்டறியும் அமைப்பு அறிமுகமாக உள்ளது.
குறித்த அமைப்பு புதிய தொடர்பில் இருந்து வரும் குறுந்தகவல்கள் தொடர்பில் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கும் என கூறப்படுகிறது.
அதேபோன்று ‘வட்சப்பில் அறிமுகம் இல்லாத நபர்களுடன், காணொளி உரையாடலில் ஈடுபடும் போது , தொலைபேசி திரையை பகிரும் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்தி காட்டப்படும் என குறிப்பிடப்படுகிறது.
இது இணைய மோசடி கும்பல் வங்கி விபரங்கள் அல்லது ஒருதடவை மாத்திரம் பயன்படுத்தும் கடவுசீட்டு எண்களை திருட பயன்படுத்தும் வழிமுறை என குறிப்பிடப்படுகின்றது.