இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 போட்டிகளில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் அண்மையில் நிறைவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் இன்று ஆரம்பமாகியது.

அதன்படி, இன்று நடைபெற்ற முதல் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சில் ஈடுபட தீர்மானித்தது.

போட்டியின் இடையே மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 18 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

இந்தநிலையில், இந்திய அணி 9.4 ஓவர்களில் 97 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை குறுக்கிட்டது.

சூர்யகுமார் யாதவ் 39 ஓட்டங்களுடனும், சுப்மன் கில் 37 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

நீண்ட நேரத்திற்கும் மேலாக மழை நிற்காததால் இரு அணிகளுக்கும் இடையிலான இந்த முதல் டி20 போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இன்றையப் போட்டியில் 39 ஓட்டங்கள் எடுத்து களத்திலிருந்த சூர்யகுமார் யாதவ், 2 ஆறு ஓட்டங்களை விளாசியிருந்தார்.

இதன் மூலம், சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆறு ஓட்டங்களை விளாசி அவர் சாதனை படைத்துள்ளார். முன்னதாக சர்வதேச டி20 போட்டிகளில் 150 ஆறு ஓட்டங்களை விளாசியவர்களில் ரோஹித் சர்மா (205 ஆறு ஓட்டங்கள்) , முகமது வசீம் ( 187 ஆறு ஒட்டங்கள்) , மார்ட்டின் கப்டில் – (173 ஆறு ஒட்டங்கள்) , ஜோஸ் பட்லர் ( 172 ஆறு ஓட்டங்கள்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர்.