கொழும்பு ஆர்.பிரேமதாஸ விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இலங்கை மற்றும் நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டது.

இதனையடுத்து குறித்த இரு அணிக்கும் தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன.

மழையின் குறுக்கீடு இரு அணிகளின் அரையிறுதி வாய்ப்புகளைப் பாதித்துள்ளது.

இலங்கை அணி 4 போட்டிகளில் விளையாடியுள்ள போதிலும் இதுவரை ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை.

இதன்காரணமாக புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது.

இலங்கை அணி பங்கேற்ற 4 போட்டிகளில் 2 போட்டிகள் மழை காரணமாகக் கைவிடப்பட்டதால் இரண்டு புள்ளிகளைப் பெற்றுள்ளது.

அத்துடன் இலங்கை அணியின் நிகர ஓட்ட விகிதம்( NRR) -1.526 ஆக பதிவாகியுள்ளது.

இதற்கிடையில், நியூசிலாந்து மகளிர் அணி 4 போட்டிகளில் பங்கேற்று 1 வெற்றியுடன் 3 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இதன்படி நியூசிலாந்து அணியின் நிகர ஓட்ட விகிதம்( NRR) -0.245 ஆக பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் அவுஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

புள்ளிப்பட்டியலில் 7 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய மகளிர் அணி முதலாவது இடத்தில் உள்ளது.

மறுபுறம், இங்கிலாந்து மகளிர் அணி 3 போட்டிகளில் விளையாடி 6 புள்ளிகளுடன் 2ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த இரு அணிகளும் நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இதுவரை தோல்வியைச் சந்திக்கவில்லை.

அத்துடன் 6 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்க அணி 3ஆவது இடத்தில் உள்ளது.

மேலும் இந்தியா, நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் புள்ளிப்பட்டியலில் முறையே 4,5 மற்றும் 6ஆம் இடங்களைப் பிடித்துள்ளன.

புள்ளிப்பட்டியலில் பாகிஸ்தான் அணி எவ்வித வெற்றிகளையும் பதிவுசெய்யாமல் இறுதி இடத்திலுள்ளமை குறிப்பிடத்தக்கது.