சர்வதேச விருதுகள் பெற்ற பிரபல இலங்கை இயக்குனர் தேவிந்த் கோங்காகே இயக்கிய இத்திரைப்படம், சமூக மற்றும் அரசியல் உண்மைகளை தைரியமாக பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். அவர்களுக்கு விழாவில் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.
பெரும்பாலான திரைப்படங்கள் மற்றும் கலைப் படைப்புகள் சமூக உண்மைகள் மற்றும் அரசியல் முரண்பாடுகளைத் தவிர்க்கும் நிலையில், “நீறு பூத்த நெருப்பு” அவற்றை நேர்மையாக எதிர்கொள்வதன் மூலம் தனித்துவத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.
சகோதரமொழியான சிங்கள மொழியைச் சேர்ந்த இயக்குனரால், முழுமையாக தமிழில் உருவாக்கப்பட்டுள்ளதோடு, இதில் இந்திய மற்றும் இலங்கை நடிகர்கள் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
திரைப்படத்தின் கதை வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டதாகும். அதில் சில கதாபாத்திரங்கள் பற்றி முன்பாகப் பத்திரிகைகள் மற்றும் புத்தகங்களின் மூலம் கேள்விப்பட்டிருந்தாலும், சில புதிய கதாபாத்திரங்கள் இத்திரைப்படத்தின் வழி அறிமுகமாகியுள்ளதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
இயக்குனர் தேவிந்த் கோங்காகேவின் முந்தைய படைப்பான “கிரிவசிபுர” (Girivassipura) கடந்த ஆட்சிக் காலத்தில் திரைக்கு வராமல் போனது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் காலங்களில் அந்த திரைப்படமும் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.