இலங்கையின் மத்திய மலைநாட்டில் அமைந்துள்ள ஹோட்டன் சமவெளி தேசியப் பூங்காவில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பூக்கக்கூடிய அரிய மலர்களான நீலக்குறிஞ்சிப் பூக்கள் தற்போது பூக்கத் தொடங்கியுள்ளன.
2,100 மீற்றருக்கும் அதிகமான உயரத்தில், கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில், நீலம், ஊதா, இளஞ்சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் குறித்த மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்தப் பூக்கள் குறைந்தபட்சம் அரை மீற்றரிலிருந்து ஒரு மீட்டர் வரை வளரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 2013ஆம் ஆண்டு பூத்த இந்தக் குறிஞ்சி மலர்கள், தற்போது மீண்டும் 2025இல் பூத்துள்ளன.அடுத்ததாக, இவை 2037ஆம் ஆண்டிலேயே பூக்கும் எனச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த அரிய நிகழ்வைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுச் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் ஹோட்டன் சமவெளியை நோக்கிப் படையெடுக்கின்றனர்.
இதன் காரணமாக, நுவரெலியா, பட்டிபொல, அம்பேவளை போன்ற பிரதான வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நெரிசலைச் சீர்செய்யும் வகையில், அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பட்டிபொல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமைப் பரிசோதகர் அனில் ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.