பிபிலை – பசறை வீதியை அண்மித்து நிலவும் மண்சரிவை தடுப்பதற்காக வீதி அபிவிருத்தி அதிகார சபையும், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO) இணைந்து விசேட திட்டத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிவித்துள்ளது.
இதற்கான திட்டப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக தெரிவித்தார். அதன்படி, அடுத்த ஆண்டுக்குள் இந்த மண்சரிவுகளை தடுக்க தேவையான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், பதுளை மாவட்டத்தில் பல மண்சரிவு அபாயங்கள் ஏற்படக்கூடும் என்றும், தற்போது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழு இந்தப் பகுதிகளை ஆய்வு செய்து மண்சரிவு ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அந்த இடங்களில் மண்சரிவு ஏற்படுவதை தடுப்பதற்கான பணிகளை தொடங்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் கொஸ்லந்த வீதிக்கு அண்மித்து பல மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அந்த இடங்கள் தொடர்பில் இதற்கு முன்னர் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தால் (NBRO)செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் மூலம் சில இடங்கள் தற்போது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அந்தப் பகுதியில் சில இடங்களில் மேலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் அப்பகுதியில் மண்சரிவு ஏற்படுவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சிரேஸ்ட புவியியலாளர் லக்சிறி இந்திரதிலக மேலும் கூறினார்.