விஹாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியைத் தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் குதிரை பராமரிப்பாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 26 ஆம் திகதி, விஹாரமஹாதேவி பூங்காவிற்குத் தந்தை ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் பொழுதுபோக்குக்கிற்காகச் சென்றுள்ளார்.

இந்தநிலையில் இரண்டு சிறுமிகளும் குதிரை சவாரி செய்து, இறுதிச் சுற்றின் போது, சந்தேக நபர் சிறுமிகளில் ஒருவரைத் தகாத முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது. சம்பவத்தைக் கண்ட சிறுமிகளின் தந்தை, உடனடியாக தனது மகளை அழைத்துச் சென்று பொலிஸ் முறைப்பாடு அளித்துள்ளார்.

பின்னர் கறுவாத்தோட்டம் பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தினர். சந்தேக நபர் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, குறித்த சந்தேக நபர் எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் செய்யவில்லை என்றும், சவாரியின் போது குதிரையிலிருந்து சிறுமி கீழே விழுவதைத் தடுக்க மட்டுமே சிறுமியைப் பிடித்ததாகத் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேக நபரை தலா 200,000 ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.