நேற்று (08) மதியம் வரை தங்க விலையானது 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 320,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், பிற்பகல் அளவில் திடீரென 8000 ரூபாயால் அதிகரித்து 328,000 ரூபாயாக அதிகரித்தது.
இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்தது. அந்த சங்கத்தின் தலைவர் ரட்ணராஜா சரவணன், இந்த விடயங்கள் தொடர்பாக எமது செய்திச் சேவையுடன் தகல்களைப் பகிர்ந்து கொண்டார்.
இதன்படி, ஒரு மாதத்திற்குள் தங்கத்தின் நிலையான விலை நிர்ணயிக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 45 நாட்களுக்குள், தங்கத்தின் விலை கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக, ரட்ணராஜா சரவணன் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்றைய (09) தங்க விலையில் இதுவரை மாற்றம் எதுவும் நிகழவில்லையென இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 328,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் பவுண் ஒன்று 303,400 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,000 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 37,925 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
உலகின் பொருளாதார மற்றும் அரசியல் நிலை குறித்த கவலைகளுக்கு மத்தியில் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளைத் தேடுவதால், தங்கத்தின் விலை முதல் முறையாக இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.