கண்டி, தென்னக்கும்புர பிரதேசத்தில் நேற்று (8) மாலை மகாவலி ஆற்றில் இறங்கியதாகக் கூறப்படும் பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல் போனதையடுத்து, அப்பகுதியில் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
காணாமல் போன மாணவர்கள் இருவரும் தென்னக்கும்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
14 மற்றும் 13 வயதுடைய மாணவர்கள் இருவரே காணாமல் போயுள்ளனர்.நேற்று மாலை வளர்ப்பு மீன் வாங்குவதற்காக திகன பகுதிக்குச் செல்வதாகக் கூறி இவர்கள் இருவரும் வீட்டை விட்டுச் சென்றுள்ளனர்.
அதன் பின்னர், இவர்கள் இருவரும் தென்னக்கும்புர பாலத்தின் கீழே உள்ள மகாவலி ஆற்றில் ஒரு பாறைக் குன்றில் நடந்து செல்வதைப் பலரும் பார்த்துள்ளனர்.
அப்பகுதியில் மீன்பிடிக்கும் ஒருவர், அந்தப் பாறைக் குன்றில் இருந்த மாணவர்களை ஆற்றுக்குள் இறங்க வேண்டாம் என்று எச்சரித்ததாகவும், ஆனால் தங்களுக்கு நீந்தத் தெரியும் என்று மாணவர்கள் கூறியதாகவும் அந்த மீன்பிடிப்பவர் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும், சிறிது நேரத்தில் மாணவர்கள் இருவரும் அங்கிருந்து காணாமல் போனதால், அவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டதாக நினைத்ததாகவும், சற்று நேரத்தில் மழை காரணமாக மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காணாமல் போன மாணவர் ஒருவரின் தாயார், தனது மகனுக்கு நீந்தத் தெரியாது என்றும், தனது மகன் மகாவலி ஆற்றுக்குக் குளிக்கச் செல்ல மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
எனினும், தென்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த மற்றொருவர், காணாமல் போன மாணவர்கள் இருவரும் ஆற்றில் குளிக்கச் செல்வதாகக் கூறி தனது மகனையும் அழைத்ததாகவும், ஆனால் அவர் அவர்களுடன் செல்லவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்நிலையில், காணாமல் போன மாணவர்களைத் தேடும் பணியில் கண்டி தலைமையக பொலிஸார்ரும் பலகொல்ல பொலிஸார்ரும் இணைந்து கூட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
காணாமல் போன மாணவர்களைக் கண்டுபிடிப்பதற்காகக் கடற்படையின் நீச்சல் வீரர்களை ஈடுபடுத்தி மகாவலி ஆற்றில் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகக் கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.