மலையகத்தில் இந்திய அரசின் நன்கொடையுடன் செயல்படுத்தப்படும் 10,000 தனி வீட்டுத் திட்டத்தில், மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், இந்த நிகழ்வு “காணி” என்ற மணமகளோ, “வீடு” என்ற மணமகனோ இல்லாத நிலையில் நடத்தப்பட்ட “காது குத்தல்” கல்யாணம் போன்றது என்று கடுமையாக விமர்சித்தார்.“காணி அடையாளப்படுத்துதல், அடிக்கல் நாட்டுதல், வீடு கட்டுதல், உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவு செய்தல் போன்ற அடிப்படைப் பணிகள் எதுவும் செய்யப்படாமல், வெறுமனே பயனாளிகளுக்கு காகிதத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய உயர்ஸ்தானிகரை அழைத்து வந்து, கட்டி முடிக்கப்படாத அல்லது காணி அடையாளப்படுத்தப்படாத வீடுகளுக்கு உரிமை வழங்குவதாக மக்களை ஏமாற்றியுள்ளனர்.
வீடுகளுக்கான நிலம் ஒதுக்கீடு, அடிக்கல் நாட்டுதல், கட்டுமானப் பணிகள், நீர், மின்சாரம் போன்ற உட்கட்டமைப்பு வசதிகள் எதுவும் நிறைவு செய்யப்படவில்லை.மலையக ஜே.வி.பி. அமைச்சர்கள் அனுபவமற்றவர்கள்.
இந்திய அரசின் தேசியக் கொடியால் தமது இயலாமையை மறைக்க முயற்சிக்கின்றனர்.பொய் சொல்லவும், தவறு செய்யவும், பயமும், வெட்கமும் இல்லாத மனிதர்கள் என ஜே.வி.பி. அமைச்சர்கள் தம்மை நிரூபித்துள்ளார்கள்.
இந்த 10,000 வீட்டுத் திட்டம், தமது கூட்டணியால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் கேட்டுப் பெறப்பட்டது.ஆனால் அதனை நடைமுறைப்படுத்தும் மலையக ஜே.வி.பி. அமைச்சர்கள், தங்கள் தலைவர் அனுர குமார திசாநாயக்கவையே ஏமாற்றியுள்ளார்கள்” என்று மனோ கணேசன் வலியுறுத்தினார்.