கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் இல்லாத நாடு என்ற தலைப்பில் கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கான தேசியத் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. அதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாக உள்ளது.

எனினும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாகவும் தெரிய வந்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப்பொருள் கடத்தல் மூலம் பாதாள உலகக்குழு பெருமளவில் விரிவடைந்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகள் வெற்றிகரமாக நடந்து வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டிற்குள் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுத்து வருகிறது.

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் கீழ் உள்ள புனர்வாழ்வு பணியகம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முறையான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதன்படி போதைப்பொருள் அடிமையானவர்களுக்கு மறுவாழ்வு பெறக்கூடிய 10 மறுவாழ்வு மையங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.