இலங்கையில் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தேவையான உரம் கிடைக்காத காரணத்தால், நாட்டின் தேயிலை உற்பத்தித் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மத்துகமவின் அகலவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு இதனை தெரிவித்த அவர், உர மானியம் தேவையில்லை என்று மக்கள் நம்பவைக்கப்பட்டதன் பின்னணியில் ஜே.வி.பி. இருந்ததாக விமர்சித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி 50 கிலோ உரம் மூட்டையொன்றை ரூ. 5000க்கு வழங்கத் தயாராக இருந்தபோது, தேயிலை, இறப்பர், தென்னை போன்ற ஏற்றுமதிப் பயிர்களுக்கு உரம் தேவையில்லை என்று மக்கள் நம்பவைக்கப்பட்டனர்இதன் விளைவாக, இன்று தேயிலை செய்கையாளர்கள் உரம் இல்லாமல் நிர்க்கதியாகி உள்ளனர் என்று அவர் கூறினார்.

தற்போதைய அரசாங்கம் மக்களின் ஆணை முழுவதையும் சர்வதேச நாணய நிதியத்துக்கு ஏலம் விட்டுவிட்டதாகவும் சஜித் பிரேமதாச கடுமையாகச் சாடினார்.ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் SVAT வரி முறை மீண்டும் அமுல்படுத்தப்படுவதால் ஏற்றுமதியாளர்களுக்குக் கிடைத்த சலுகைகள் இல்லாமல் போகும் என்று அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் சொற்படியே நடப்பதாகவும், நாட்டின் தேசிய கீதம் ‘ஸ்ரீ லங்கா தாயே’ என்பதற்குப் பதிலாக ‘IMF தாயே’ என்று மாறிவிட்டதாகவும், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளின் கைதிகளாகவும் அடிமைகளாகவும் மாறிவிட்டதாகவும் அவர் விமர்சித்தார்.