தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக நேற்று (17) தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடல், தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தினர் கலந்து கொள்ளாமையினால் குறித்த கலந்துரையாடல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாளிமார் சம்மேளனம் இந்த கலந்துரையாடலில் கலந்து கொள்ளாமை நாட்டின் சட்டத்தை அவமதிக்கும் செயல் என்று தோட்டத் தொழிலாளர் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ரூ.1,350 இருந்து ரூ.1,700 ஆக உயர்த்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி, கடந்த பாதீட்டில் பொது சேவை மற்றும் தனியார் துறையில் சம்பள உயர்வுக்கு ஏற்ப தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது.
ஜனாதிபதி செயலகத்தில் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது, தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ஏற்ற சம்பளத்தை வழங்கி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.இத்தகைய பின்னணியில், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பாக வேதன நிர்ணய சபையுடன் நேற்று நாரஹேன்பிட்டியில் உள்ள தொழிலாளர் தலைமை அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
இருப்பினும், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் தொழிற்சங்கங்கள் கலந்துரையாடலுக்கு அழைக்கப்பட்டிருந்தாலும், தோட்ட முதலாளிமார் சம்மேளனம் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை என்று தொழிற்சங்க பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர்.