நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஆறு மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற (அவதானிப்பு) மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மையம் இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. குறித்த எச்சரிக்கையானது இன்று மாலை 7 மணி முதல் நாளை (19) மாலை 7 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஊவா பரணகம, கண்டி மாவட்டத்தின் தொழுவ, உடுநுவர, தெல்தோட்ட, உடுதும்பர, கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கனை, புலத்கொஹூபிட்டிய, மாவனெல்ல, ருவன்வெல்ல, அரநாயக்க, கேகாலை, யட்டியாந்தோட்டை, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, அம்பன்கங்க கோரளை, உக்குவெல, பல்லேபொல, ரத்தோட்டை, நுவரெலியா மாவட்டத்தின் ஹங்குராங்கெத்த, வலப்பனை, அம்பகமுவ, இரத்தினபுரி மாவட்டத்தின் இம்புல்பே, எஹெலியகொட, கலவானை, இரத்தினபுரி, வெலிகேபொல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள், தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்குமாறு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.

நிலத்தில் விரிசல்கள், நிலம் உள்வாங்கல், மரம் சாய்வது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.