மத்தேகொட, கிரிகம்பமுனுவ பகுதியில் அமைந்துள்ள கைப்பை மற்றும் பணப்பை தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் இன்று அதிகாலை பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டே மற்றும் ஹொரணை ஆகிய பகுதிகளிலிருந்து நான்கு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 17 அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு தீவிரமாகப் போராடி தீயை அணைத்தனர்.
தீயை அணைக்க முயற்சித்த தொழிற்சாலையின் உரிமையாளர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் ஹோமாகம அடிப்படை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்தின் போது தொழிற்சாலையில் இருந்த 26 இயந்திரங்கள், உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்கள் என கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளன. தொழிற்சாலையானது உரிமையாளரின் வீட்டின் அருகிலேயே அமைந்துள்ளதால், தீயின் தாக்கத்தினால் வீட்டின் குளியலறையும் சேதமடைந்துள்ளது.