தாங்கள் முன்னெடுத்துள்ள சட்டப்படி வேலைசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை உடனடியாக கைவிட்டுள்ளதாக இலங்கை அறிவித்துள்ளன.

தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக எட்டப்பட்ட வாய்மொழி ஒப்பந்தங்களுக்கான எழுத்துப்பூர்வமான உறுதிப்பாட்டைப் பெற்றதைத் தொடர்ந்து, இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறித்த தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஊழியர்களின் உரிமைகளுக்கான உத்தரவாதங்களைப் பெறுவதற்காகவும் இந்தப் போராட்டத்தை தொழிற்சங்கங்கள் முன்னெடுத்திருந்தன.

இது தொடர்பான பேச்சுவார்த்தைகளின் போது ஒப்புக்கொள்ளப்பட்ட சலுகைகளை அதிகாரிகள் முறையாக ஆவணப்படுத்தியுள்ளனர் என்பதை தொழிற்சங்கங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

புதிய துணை நிறுவனங்களுக்கு மாறுதலின்போது ஊழியர்களின் உரிமைகள், வேதனம், ஓய்வூதியம் மற்றும் வேலை நிலைமைகள் ஆகியவை பாதுகாக்கப்படுவதை உறுதிசெய்ய, இந்த ஒப்பந்தங்கள் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என்பதற்காகவே எழுத்துப்பூர்வமான உறுதிப்பாடு அவசியம் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியிருந்தன.

இந்தநிலையில், கடந்த செப்டம்பர் மாதம் 4 ஆம் திகதி முதல் தொடங்கிய இந்த சட்டபடி வேலைசெய்யும் போராட்டத்தின்போது, ஊழியர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட வேலைகளை மட்டுமே கண்டிப்பாகச் செய்து, அவசர மற்றும் கூடுதல் வேலைகளைத் தவிர்த்து வந்தனர்.

இதன் காரணமாக, மின்சார சபையின் அவசரமற்ற சேவைகள் மற்றும் நிர்வாகச் செயல்பாடுகளில் சிறு இடையூறுகள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.