மலையகப் பிரதேசங்களை பொறுத்தவரை மலையகத் தமிழர்களே பெருமளவில் காணப்படுகின்றனர். இவர்களின் வாழ்வியல் முறைகள் இந்திய தமிழ்நாட்டு கலை, கலாசாரம், பண்பாடு என்பனவற்றை தழுவியதாக காணப்படுகின்றது.

அந்த வகையில் வழிபாட்டு முறைகளை எடுத்துக் கொண்டோமேயானால் சிறு தெய்வ வழிபாட்டு முறைகள் அதிகளவில் காணப்படுகின்றது. இவ்வழிபாட்டில் குல தெய்வ வழிபாடு, ஊர் தெய்வ வழிபாடு என்பன காணப்படுகின்றன.

அத்துடன் மாரியம்மன் வழிபாடு சிறப்பு இடத்தைப் பிடிக்கின்றது. சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் இக்காலக் கட்டத்தில் சமய வழிபாட்டு முறைகள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. இறைவழிபாட்டினால் மனிதனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கை காலம் காலமாக கூறி வரும் மரபாகும்.

பண்டைய காலம் தொட்டே பஞ்சபூதங்களை தெய்வமாக நினைத்து வழிபடும் மரபு காணப்படுகிறது. மரத்திற்கு உயிருண்டு என்று என்று நம்பி வழிபட்ட மனிதன் பின்பு மரத்தில் தெய்வம் உறைகிறது என மரத்தை வழிபட ஆரம்பித்தான். எனவே தெய்வத்திற்கும், இயற்கைக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகிறது. பிள்ளையார் ஆலமரம், அரச மரத்தடியில் இருப்பதாகவும், அம்மன் வேப்பமரத்தடியில் இருப்பதாகவும், புத்தர் அரசமரத்தடியில் இருப்பதாகவும் நம்புவது ஐதீகம். அதனடிப்படையில் ஐம்பூதங்களுக்குறிய தெய்வமாக பெண் தெய்வ வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. நிலத்திற்குறிய தெய்வமாக பூமாதேவி கொள்ளப்படுகிறாள்.

அதனடிப்படையில் நோக்கும் போது வட்டகொட தெப்பக்குளத்தம்மன் குளிர்ந்த நீரின் மேல் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றாள். இயற்கை வனப்புமிக்க இப்பிரதேசத்தின் அம்பாளுக்கு ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் அதாவது பங்குனி, சித்திரை மாதங்களில் திருவிழா இடம்பெறுகின்றது. ஊர் மக்கள் இணைந்து செய்யப்படும் இவ்விழாக்காலத்தில் தெப்பத்தேர் பவனியானது இடம்பெறுகிறது. மலையகத்தில் இவ் ஆலயத்தில் மட்டுமே சிறப்பம்சமாக விளங்குறது. இதனை காண மலையகத்தின் பலப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருகின்றனர். இதற்காக விசேடமாக ஒவ்வொரு வருடமும் காட்டு மூங்கில் கொண்டு தெப்பம் அமைக்கப்படுகின்றது. இத்தெப்பம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்படுகின்றது. அபிஷேக ஆராதனைகளுக்கு பின்பு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தெப்பக்குளத்தம்மன் தெப்பத்தில் ஏற்றப்பட்டு இரவு முழுவதும் குளத்தில் பவனி வருவாள். இக்காட்சியை காண கண்கோடி வேண்டும். வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவில் அம்மன் கம்பீரத்தோற்றத்தில் சிம்மவாஹினியாக பக்தர்களுக்கு காட்சி தருவாள்.

இந்த சக்தி வாய்ந்த அம்மன் வழிபாட்டில் ஆன்மீகமும், மருத்துவமும் இணைந்து காணப்படுகிறது. அதாவது கோடைக்காலங்களிலும் மலையகத்தின் பெரும்பகுதிகளில் சின்னம்மை, கண் வலி, வயிற்றுளைவு போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. இக்காலங்களில் அம்மன் நோய் தீர்க்கும் சக்தியாக எழுந்தருளுகிறார். மாரியம்மனை நினைத்து தரப்படும் தீர்த்தத்தில் மஞ்சளும், வேப்பிலையும் கலந்துள்ளதால் இதனைப் பருகும் பக்தர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது. இதனால் இவ்வகை நோயினால் ஏற்படும் பாதிப்பு குறைவாக காணப்படுகின்றது. அத்துடன் கோடைக்காலத்தில் மழைநீர் வேண்டி இவ் அம்மனுக்கு ஊற்றுநீர் எடுத்து பிரதேச பெண்களால் அபிஷேகம் செய்யப்படுகின்றது. இதனால் மழை பெய்யும் என்பது ஐதீகம். அது மட்டுமின்றி அபிஷேகம் செய்யப்பட்ட பின்பு மழை பெய்துள்ளமையும் குறிப்பிடத்தக்க வேண்டியதாகும்.
மாரியம்மன் பிரசாதம் என நோயாளிக்கு வழங்கப்படும் போது இறை நம்பிக்கையின் பின்அடிப்படையில் நோயாளிக்கு சுகமாகின்றது. எனவே சர்வரோக நிவாரணியாகவும் இவ் அம்மன் அருள்பாலிக்கின்றார். அத்துடன் இந்த ஆலயக் கட்டமைப்பினால் சூழலியல் அமைப்பு, உயிர்ப்பல்வகைமை என்பன பாதுகாக்கக்கப்படுகின்றமையும் குறிப்பிடப்பட வேண்டியவை ஆகும். எனவே அனைவரும் வருக அருள்மிகு வட்டகொட தெப்பக்குளத்தம்மன் அருள் பெறுக.