நாட்டில் மனித-யானை மோதலைத் தணிப்பதற்காக அதிகாரிகள் தேசிய செயற்திட்டத்தைத் தயாரித்து வருவதாக சட்ட மாஅதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.

யானைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, சட்டவிரோத மின்சார வேலிகளைக் கண்டறிந்து அகற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சட்ட மாஅதிபர் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி ஷெமந்தி டுனுவில்லே இந்த விடயம் தொடர்பில் மன்றுக்கு அறியப்படுத்தினார்.

வரைவு செயல்முறை இறுதி செய்யப்பட்டவுடன், தேசிய செயற்திட்டத்தின் நகல், மனு மூலம் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் அவர் மன்றில் உறுதியளித்தார்.

அதன்படி, இந்த வழக்கை எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் 488 யானைகள் காணாமல் போனதாகவும், 2024 நவம்பர் மாத இறுதிக்குள் மேலும் 354 யானைகள் காணாமல் போனதாகவும் மனுதாரர் கூறியுள்ளார்.

இவற்றில், 2023 ஆம் ஆண்டில் மின்சாரம் தாக்கி சுமார் 72 யானைகள் கொல்லப்பட்டுள்ளதுடன், 2024 ஆம் ஆண்டில் 49 யானைகள் மின்சாரம் தாக்கிக் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.